குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு செல்வதும் கிடையாது. எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான்.  மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகள் மட்டும் செய்வது.

குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். (உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள்) பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.

பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குல தெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும். பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே களை கட்டி பொங்கல், கிடா வெட்டு, பலி என்று அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத் திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் துவங்குவார்கள். அதுவே முறையானதாகும்.

உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள். குலதெய்வம் தெரியாதிருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். ‘உங்க தாத்தா, கெழக்காம இருக்க ஒங்க குலச்சாமி வெட்டேரி கோவிலுக்கு போகாம எந்த காரியத்தை செஞ்சாரு அந்தக் காலத்துல” என்று பெரும்பாலும் பட்டென்று பதில் வந்து விடும். தெரியவில்லை என்றாலும், பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும். இல்லாவிடில் உங்கள் ஜாதகத்தை, அல்லது உங்கள் தந்தை ஜாதகத்தை ஜோதிடர் யாரிடமாவது காட்டி கேட்டால், உத்தேசமாக சொல்லி விடுவார்கள். ஐந்தாமிடம், அதன் அதிபதியை வைத்து, திசை, குறிகளை சொல்லி விடுவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்த தெய்வத்திற்கென்று மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் சிறப்பாக வழிபாடு நடக்கும். குல தெய்வத்திற்கென உள்ள வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள். உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.

குலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. ‘குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்’ என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

(என் சோதிட ஆலோசனைகளில் default ஆக வைத்திருந்த இந்த குறிப்பை சிலருக்கு ஆலோசனை அனுப்பும் போது சேர்க்காமல் விட்டு விட்டதால் இந்த இடுகை).

லக்னத்தில் சனி

மன உறுதியுடையவர் அல்லது கல்மனம் படைத்தவர் என்றும் சொல்லலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் மன உறுதி இருக்கும், தீய நிலையில் இருந்தால் கல் நெஞ்சனாகவும், கொடூர மனமுடையவராகவும் இருப்பார். மந்தமானவர், தனிமையை விரும்புவார், சிக்கனமானவர். தீய நடத்தை, தீய எண்ணம் உடையவர். அதிக காமம் உடையவர். கீழான பெண்களிடம் நேசமுடையவர். மனைவியை வெறுப்பார். குடும்பத்தை விட்டுப் பிரியலாம்.

தெய்வ நம்பிக்கை குறைவு, சோம்பல் அதிகம் இருக்கும், ஆனால் அவசரமும் இருக்கும். கடைசி நேரத்தில் அவசரமாக எதையாவது செய்து கொண்டு அவதிப்படுவார்கள்.  அழகு இருக்காது, விகார தோற்றம் இருக்கலாம். கஞ்சத்தனமும் இருக்கும். யாரிடமும் ஒட்டி உறவாடத் தெரியாதவர்களாக இருப்பார்கள். தன்னை விட மூத்தவர்களின் சகவாசம் அதிகம் ஏற்படும். அபகீர்த்தியாளர். அதிகம் பயணிப்பார்.

இவரது வருகை பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இவர்களைப் பார்த்தாலே பலருக்கு பிடிக்காது. கிழத்தோற்றம் உடையவராயிருப்பார்கள். சிறுவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்து விடும், லேசாக கூன் விழும். சிடுமூஞ்சியாக இருக்கும் இவர்களே இவர்களுக்கு விரோதிகள் என்னும்படி நடந்து கொள்வார்கள்.

சனி நல்ல நிலையில் லக்னத்தில் இருந்தால், இவற்றுக்கெல்லாம் எதிர்மாறாக சிறந்த பலன்கள் நடைபெறும். உதாரணமாக சனி நல்ல நிலையில் இருப்பவர்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களுடன், சிறந்தவர்களுடன் நட்பு கொள்வார்கள். இவர்களின் முதுமைத் தோற்றம் காரணமாகவே ஒரு கம்பீரம் ஏற்பட்டு விடும். அந்த தோற்றம் கிழத்தோற்றமாக தெரியாது, ஜாதகரை அனுபவசாலியாகக் காட்டும். உலக மகா கஞ்சனாக இருந்தாலும் கூட சிக்கனமானவர் என்றுதான் பெயர் வாங்குவார். காமாந்தகராக இருந்தால் கூட, உல்லாசப் பேர்வழி என்று பெயர் வாங்குவார்.

லக்னத்தில் குரு / சுக்கிரன்

லக்கினத்தில் குரு

கம்பீரர், பருமனானவர், பெருந்தன்மை மிக்கவர், அதிர்ஷ்டங்கள் உடையவர். உயர் கல்வி, அரச சன்மானம் உடையவர். பிதுர் பாக்கியம் மற்றும் குழந்தைகள் பல உடையவர். எடுத்த வேலையை முடிக்கும் திறமைசாலி. நன்னடத்தை, தெய்வ நம்பிக்கை உடையவர், புராண இதிகாசங்களை விரும்புவார். பிராமணப் பெண்களை விரும்புவார். நன்றி மறவாப் பண்புடையவர், கல்விமான், நல்ல அறிவாளி. பூர்வ புண்ணியம் உடையவர். மனைவி மீது அன்புடையவர், தந்தை, முன்னோர் மீது பக்தியும் மதிப்பும் உடையவர்.

சாதுக்கள், சாமியார்கள் போன்ற ஆன்மீகவாதிகளுடன் நட்பு கொள்வார். ஆசிரியர் போன்று உபதேசிக்கும் இயற்கையை உடையவர். பேச்சில் கவர்ச்சி இருக்கும், கபடம் அற்றவர். சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புண்டு. சிறந்த பரோபகாரி, பிறருக்கு உதவும் பாங்குடையவர், சாந்தமான தோற்றம் உடையவர், நல்ல சிந்தனை உடையவர். பிறர் மெச்சும்படி வாழுபவர்.

—————-

லக்கினத்தில் சுக்கிரன்

அழகியவர், கலையில் சிறப்பார்.  பிறர் செல்வாக்காக இருந்தால், அதைக்கண்டு பொறாமைப் படுபவர். நல்ல கல்வி கற்றவர். கலைகளில் ஈடுபாடோ தேர்ச்சியோ உண்டு. கலைத் தொழிலாகவும் இருக்கலாம். மலர், வாசனாதி திரவியங்கள், அழகுப் பொருட்கள், பெண்கள் சம்பந்தமானவை போன்ற துறைகளில் இருக்கலாம்.

கணிதம் சோதிடம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். நல்ல மனைவியை அடைவார். ஆடையாபரணங்களை விரும்புவார். நல்ல வித்வானாகவோ கலைஞனாகவோ இருக்கலாம்.